Blog Details
24 Sep 2026
Tamil Nadu Government honors families of organ donors
தமிழ்நாடு உடல் உறுப்பு தான தினத்தை ஒட்டி, மாநில உடல் உறுப்பு தான ஆணையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், உடல் உறுப்பு தானம் செய்த கொடையாளர்களின் குடும்பத்தினரை கௌரவிக்கும் விழா நடைபெற்றது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் காணொலி மூலமாக இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார். சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் தரேஸ் அகமது மற்றும் தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டத்தின் (TNHSP) திட்ட இயக்குனர் டாக்டர் எஸ். உமா, இ.ஆ.ப., ஆகியோர் நிகழ்விற்கு நேரில் வருகைதந்து, மூளைச்சாவு அடைந்த கொடையாளர்களின் குடும்பத்தினரை கௌரவித்தனர்.
உறுப்பு தானம் வழங்கிய கொடையாளர்களுக்கு புகழ் வணக்கமும், அவர்தம் குடும்பத்தினருக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
ஒருவர் மூளைச்சாவு அடையும் தருணத்தில், அவருடைய குடும்பத்தினர் எடுக்கும் அந்த ஒரு இரக்கமுள்ள, மனிதநேயமிக்க, துணிச்சலான முடிவு, பலருக்கு புத்துயிரும் புது வாழ்வும் அளிக்கக்கூடியது. இருளில் தவிக்கும் ஒருவருக்குப் பார்வையைத் தருகிறது, இயங்கத் துடிக்கும் ஒரு சிறுவனுக்குப் புதிய இதயத் துடிப்பைத் தருகிறது, நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடும் குடும்பத் தலைவருக்குப் புதிய நுரையீரலையும், சிறுநீரகத்தையும் வழங்கி, அந்தக் குடும்பத்தையே வாழவைக்கிறது!
ஒரு மூளைச்சாவு அடைந்த கொடையாளரால், 8 உயிர்களைக் காப்பாற்ற முடியும். 50-க்கும் மேற்பட்டோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.
உறுப்பு தானப் படிவத்தில் கையெழுத்திடுவது, நாம் இந்த உலகத்திற்கு விட்டுச் செல்லும் மிக உயரிய கொடையாகும். இன்றே உறுப்பு தானம் செய்ய முன்வருவோம்.